Moving to www.karthiteach.com

Wednesday, July 15, 2015

பசி என்னும் அரக்கன்

மாலை ஏழு மணி இருக்கும் என்று நினைக்கின்றேன். ஓ எம் ஆர் சாலையில் உள்ள ஒரு சிறு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வெளியே வந்து நின்றிருந்தேன். காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே வீட்டிற்கு சென்றவுடன்  செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

சில நேரம் கழித்து ஒரு சிறுவனின் விரல்கள் என் மீது பட்டதை உணர்ந்து சட்டென திரும்பிப்பார்த்தேன்.  ஒரு ஏழைச் சிறுவன் கையில் சில புத்தகங்களோடு நின்றுகொண்டு என்னை பார்த்து, "அண்ணா book வாங்கிகோங்க ணா  .... காலேல இருந்து ஒரு book கூட விக்கல .. ரொம்ப பசிக்குது ணா " என்றான். சற்று யோசித்த நான் "இல்லப்பா எனக்கு வேண்டாம் " என்று சொல்லிவிட்டு என் யோசனைகளைத் தொடர்ந்தேன். சிறுவன் விடவில்லை . மீண்டும் என்னை தொட்டு அழைத்து "அண்ணா please ஒரே ஒரு புக் மட்டும் வாங்கிகோங்க ... பத்து ரூபா தான்", என்று கெஞ்சினான். சிறுவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, "சரி கண்ணா book லாம் வேண்டாம். நீ எங்க இருக்க ? உன் அப்பா அம்மா லாம் எங்க?" என்று வினவினேன். "அப்பா இல்ல. அம்மா வீட்ல இருக்காங்க. இங்கதான் ஓடை பக்கத்துல இருக்கோம். ", என்று வெகுளியாய் பதிலளித்தான். "சரி அம்மா வேலைக்கு போகலைய ... நீ படிக்கலாமே ... ஏன் அவங்க என்ன பண்றாங்க ?", என்று கேட்க , "அம்மா வேலைக்கு போறாங்க ... நான் book விக்கிறேன். வீட்ல பாட்டி, தம்பி இருக்காங்க", என்று எதார்த்தமாக பதில் கூறினான். "சரி இந்த book லாம் எங்க வாங்குற?" என்று ஆர்வமாய் கேட்டதற்கு, "parrys ல போய் வாராவாரம் வாங்கிட்டு வந்து இங்க விப்போம். அங்க கம்மி விலைக்கு கிடைக்கும்", என்றான்.

"சரி எனக்கு book லாம் வேண்டாம். சாப்பாடு வாங்கி தரேன். வீட்டுக்கு கொண்டு போறியா?", என்று வினவ, குழந்தைத்தனத்தோடு தலை அசைத்தான். அருகில் நான் சற்று நேரம் முன்பு உண்டு விட்டு வந்த "சர்வர்  சுந்தரம்" உணவகத்தில் ஐந்து தோசைகளை parcel கட்டச்சொன்னேன். கடைக்காரர் என்னையும் அந்தச்சிறுவனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தார். நான் parcel லைப் பெற்றுக்கொண்டு அவன் கொண்டு வந்திருந்த புத்தகப்பைக்குள் வைத்துவிட்டு, "கண்ணா! பத்தரமா கொண்டு போய் வீட்ல சாப்புடுங்க .." என்றேன். எதார்த்தமாக தலை அசைத்தவன் முகத்தில் வெகுளித்தனம் தெரிந்ததே தவிர ஆனந்தமோ சோகமோ தென்படவில்லை. என் மனம் மகிழ்ச்சியோடு பெருமூச்சு விட்டது :)


அன்று பல கேள்விகள் தோன்றின . இன்று இவன் பசி ஆற்றிவிட்டாகியது. நாளை அவன் என்ன செய்வான்.? இதேபோல் புத்தகங்களைச் சுமந்துகொண்டு வீதிகளை வலம் வருவான். இவன் எதிர் காலம் என்னவாகும் ? இதேபோல் சுற்றித்திரியும் சிறுவர்களுக்கும் அதே நிலைமைதான். இதற்கு தீர்வுதான் என்ன ? என்னால் தற்போதைக்கு முடிந்த இரண்டு வழிகளை யோசித்தேன். உங்களுக்கும் பகிர்கிறேன்.

1. இன்றைய பசியை போக்க அன்னதானம். அன்னதானதிருக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். மேலும் முடிந்தவரை பசியில் இருபோரைக்கண்டால் நிச்சயம் உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாங்கும் சம்பளத்தில் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு கொடுக்காதவன் நிச்சயம் சுயநலவாதியே ! நான் சுயநலவாதிய வாழ விரும்பவில்லை ..

2. நாளைய பசியைப்  போக்க கல்வி ஒன்றே வழி. ஏழைக் குழந்தைகளுக்கு HOPE Foundation இல் பாடம் சொல்லிக்கொடுதுக்கொண்டிருந்த எனக்கு அன்று ஒரு ஊக்கம் கிடைத்தது.

"தானத்தில் சிறந்தது அன்னதானம்", என்று சொல்வதுண்டு. பழமொழி ஒரு பக்கம் இருக்க, அதனால் நம் மனம் அடையும் நிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. பசி என்று ஒன்று இல்லையெனில் இவ்வுலகம் இன்று  இவ்வாறு இயங்கிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. பசியாறிய ஒருவன் தரும் ஆசிர்வாததின் மகிமை வேறெதில் உண்டு ? நீங்களும் உங்களால் முடிந்தவரை உங்களைச்சுற்றியுள்ளவர்களின் பசி போக்க முயற்சி செய்யுங்கள். நூறுமுறை கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதில் கிடக்கும் நன்மையை விட ஒரு மனிதனின் பசியைப் போக்குவதில் கிடைக்கும். கருணை உள்ளம் கொண்ட உங்களுக்கு அந்தக் கடவுளும் கருணையைப் பொழிவார்! கருணை உள்ளம் இல்லாதவர்கள் எவ்வாறு கடவுளின் கருணையை எதிர்பார்க்க முடியும் ? :)

மேலும் உங்கள் அருகில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். கல்வி வியாபாரம் ஆயக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சிறிதேனும் உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அறிவைப் பகிர்ந்து கொள்வதால் நம் அறிவு மென்மேலும் வளருமே தவிர மங்கி விடாது என்பதை உணர்வோம் . நாளை இதுபோல சிறுவர்கள் கதியின்றி சுற்றிதிரிவதை நாம் நினைத்தால் நிச்சையம் தடுக்க முடியும் !!!
   
Post a Comment